Saturday, October 1, 2011

யாழ்த்தாய் - (ஆரம்பகால வரலாறு)

                                                                   யாழ்ப்பாணம் என்று வழங்கப்படும் இன்றைய நகரத்தின் வரலாறு கிபி.13ம் நூற்றாண்டில் ஆரம்பித்தது. யாழ்ப்பாண வைபவமாலை என்ற வரலாற்று இலக்கியம் அதற்கு ஆதாரமாகின்றது. மாதகல் என்ற கிராமத்தைச் சேர்ந்த மயில்வாகனப்புலவர் என்பவரே கிபி.17ம் நூற்றாண்டளவில் அந்நூலை ஆக்கியிருந்தார். யாழ்ப்பாணத்திற்கு நிர்வாக பொறுப்பு வகித்த ஒல்லாந்த அதிகாரி ஒருவரின் வேண்டுகோளின் படியே மயில்வாகனப்புலவர் இந்நூலை இயற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

                                                                ஐரோப்பியர் முதன்முதலில் காலடியெடுத்து வைத்தபோது இலங்கைத்தீவில் மூன்று அரசுகள் இருந்தன. அவையாவன ;-
                                    1) யாழ்ப்பாணத் தமிழரசு
                                    2) கோட்டைச் சிங்கள அரசு
                                    3) கண்டிச் சிங்கள அரசு
என்பனவாகும். இவற்றிலே யாழ்ப்பாணத் தமிழரசே காலத்தால் முற்பட்டதும் , வலுவுள்ளதுமாகும்.

                                                                           நல்லூரென்றழைக்கப்படும் நிர்வாக மையத்திலேயே யாழ்ப்பாணத் தமிழரசின் அரண்மனை, கோயில்கள், மற்றும் நிர்வாக அதிகாரிகளின் அலுவலகங்கள் அமைந்து காணப்பட்டிருந்தன. மந்திரி மனை, சங்கிலியன் தோப்பு, யமுனா ஏரி மற்றும் கிறிஸ்தவ ஆலயம் அமைந்துள்ள பகுதிகளாவன நல்லூர் இராசதானியின் மையப்பகுதிகளாகும்.

                                                                        நல்லூரிலுள்ள முத்திரைச்சந்தி, யானைப்பந்தி, ஆயக்கடவை ஆகியன நிர்வாகிகள் வசித்த பகுதிகளாகும்.  நல்லூரிலுள்ள வீரமாகாளியின் முன்றலிலேயே போர்த்துக்கேயப் படை வீரர்களுக்கும் - சங்கிலியனது  படைகளுக்குமிடையே போர் நடைபெற்றதாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது.

                                                                        யாழ்ப்பாணம் கிபி.1619ல் போர்த்துக்கேயரது ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. அருணகிரிநாதர் தான் பாடிய திருப்புகளில் (கிபி.17ம் நூற்றாண்டு) "யாழ்ப்பாணாயன் பட்டின மேவிய பெருமாளே" என்று நல்லூர் முருகப் பெருமானை வாழ்த்திப் பரவியதனையும் நாம் காண்கின்றோம். நல்லூரிலுள்ள முருகப்பெருமானது திருக்கோவிலை முதன்முதலில் அமைத்தது 07ஆம் புவனேகபாகுவான செண்பகப்பெருமாள் என  "நல்லூர் கட்டியம்" கூறுகிறது. "சபுமல் குமரய்ய" என்ற சிங்கள பிரதானியே செண்பகப்பெருமாள் ஆவான்.

                                                                           இவ்வாறாக சீர்மிகு யாழ்ப்பாண தமிழ் இராசதானியின் ஆரம்பகால வரலாறு அமைவதாகக் கருதலாம்.

                                                        "வாழிய யாழ்த்தாய்....!"

1 comment:

  1. "வாழிய யாழ்த்தாய்....!"
    பதிவுக்கு நன்றி சகோதரி !!

    ReplyDelete